Monday, March 11, 2013

நெஞ்சுவலி சிறுகதை

                                      
                    சங்கரலிங்கத்துக்கு குளிர்போட்டு ஆட்டியது. குளிர் என்றால் வெப்பத்துக்கு எதிர்பதமான குளிர் இல்லை. பேராசை என்னும் குளிர்.
தரகர் பொன்னம்பலம் வந்து சென்றதிலிருந்து தான் அவருக்கு இந்த நிலைமை
. நிலைகொள்ளாமல் தவித்தார். அங்குமிங்கும் சுற்றி சுற்றி வந்தார். தரிசாகிப்போன தலையை சொரிந்து, சொரிந்து புண்ணாக்கி விடுவார் போலிருந்தது.
‘பேச்சியம்மா பேச்சியம்மா’ மனைவியை அழைத்தார். எரிச்சலுடன் வெளியே வந்தாள். அவர் மனைவி பேச்சியம்மாள் ‘என்ன காலையிலிருந்து குட்டி போட்ட பூனை மாதிரி சுத்தி வாரீங்க? ஒரு கரையில பேசாம இருங்களேன். எனக்கு அடுப்படியில வேல கெடக்கு!’
‘ஆமா நீ அடுப்படிய கட்டிக்கிட்டே அழு! என் தவிப்பு உனக்கு எங்க புரியப்போவுது’ போயி எனக்கு ஒரு தம்ளர் காபி கொண்டா’
தாரேன் அரைத்தபடி உள்ளே சென்றாள் பேச்சியம்மாள் விசயம் இதுதான்! சங்கரலிங்கத்துக்கு இரண்டு பையன்கள். மூத்தவன் பாலுவுக்கு சொந்த தங்கை மகளை மணமுடித்து வைத்தார். சொந்தத்தில் பெண் எடுப்பதால் நகை விசயத்தில் தறாராக இருக்க முடியவில்லை. அவர்கள் போட்ட சொற்ப நகையுடன் திருப்திபட்டு கொள்ள வேண்டியதாயிற்று. இளையவன் முருகேசனுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை. சம்பளம் பத்தாயிரம் வாங்குகிறான். எப்படியாவது அவனுக்கு நகையும், இலட்சத்துக்கு குறையாமல் ரொக்கமும் பெற்றுவிட வேண்டும். என்று கங்கனம் கட்டிக் கொண்டு அலைந்தார். வருடங்கள் கரைந்ததே தவிர அவர் ஆசைப்படி வரன் அமையவில்லை. முருகேசன் தலையில் ஆங்காங்கே வெள்ளி கம்பிகள் முறைக்க துவங்கின மனைவி பேச்சியம்மாள், மகன் பாலுவின் ஓயாத வற்புறுத்தலுக்கு இணங்கி ஒரு வழியாய் இறங்கி வந்தார். சென்ற மாசம் தான் உடன்குடியில் ஒரு பெண்ணை பார்த்து பிடித்து உறுதி செய்துவிட்டு வந்தார்கள். பெண்ணின் தந்தை இரண்டு வேன், ஒரு அம்பாஸ்டர் வைத்து சிறியதாய் டிராவல்ஸ் நடத்திவந்தார். இரண்டு மணிநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு முப்பது பவுன் நகைக்கு சம்மதித்தார். ரொக்கம் எல்லாம் தரவழியில்லை என்று மறுத்துவிட்டார். வேறி வழியில்லாமல் சங்கரலிங்கமும் சம்மதித்தார். நாளை மாலை நிச்சயதாம்பூலம் எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்த நிலையில்தான் தரகர் பொன்னம்பலம் வந்து வினையை மூட்டினார்.
நம்மாளுதான் பையன் ஜாதக நகல தமிழ்நாடு முழுவதும் நோட்டீஸ் அடிக்காத குறையாக விநியோகம் செய்திருக்கிறாரே. அதில் ஒரு நகல் திருநெல்வேலியில் சிறியதாய் ஜவுளிக்கடை வைத்திருக்கும் ஒருவரின் கைக்கு கிடைக்க அது அவரது மகளுக்கு பொருந்திவர தரகர் பொன்னம்பலம் மூலம் சொல்லியனுப்பியிருக்கிறார். அனுப்புன மனுசன் சும்மா அனுப்பவில்லை. முப்பது பவுன் நகையோடு ஒரு இலட்சம் ரொக்கம் தரவும் தயார் என்று தூது அனுப்பியிருந்தார். தரகர் அனைத்து விசயத்தையும் விளக்கி விட்டு யோசித்து சொல்லுங்க என்று புறப்பட்டார். போகிற போக்கில் ‘அவர் ஒண்ணு தர்றேன்னு சொல்றார், நாம ரெண்டு கேட்டு ஒன்றரையில முடிப்போம்’ என்று அல்வாவை கிளறுவது மாதிரி ஆசையை கிளறிவிட்டு சென்றார்.
சங்கரலிங்கம் பலவாறு யோசித்தார். எப்படியும் உடன்குடி வரனை நிறுத்திவிட்டு, திருநெல்வேலி பெண்ணை முடித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தார் விசயத்தை அப்படியே வெளியே சொன்னால் பெரிய பிரச்சினை ஆகிவிடும். சாதிசனங்கள் மதிக்க மாட்டார்கள். முகத்தில் காறி உமிழவும் தயங்கமாட்டார்கள். என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்தார். அப்பொழுது டி.வி.யில் ஃபிளாஷ் நியுஸ் ஓடியது ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பீகார் மந்திரி நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி.
இவர் மூளையில் ஒரு ப்ளாஷ் அடித்தது திட்டம் உருவானது திட்டம் இதுதான் நெஞ்சுவலிக்கிறது என்று கூறி உள்ளூர் மருத்துவமனையில் சேர்ந்து விட வேண்டும். நிச்சய தாம்பூலத்தை ஒரு மாதம் கழித்து வைத்துக்கொள்ளலாம் என்று தகவல் சொல்லி அனுப்பிவிடுவது. அதன்பிறகு ஆறின கஞ்சி பழங்கஞ்சிதானே ஒருமாதம் கழித்து ஏதாவது காரணம் சொல்லி அந்த வரனை கழித்து விடவேண்டும். இதற்கிடையில் தரகர் பொன்னம்பலம் மூலம் திருநெல்வேலி பெண்ணை பேசி முடித்துவிட வேண்டும். இத்திட்டத்தை மனைவி மக்களிடம் கூட சொல்லக்கூடாது. என்று முடிவெடுத்துக் கொண்டார்.
மாலை ஐந்து மணி திட்டத்தின் முதல் கட்டம் நெஞ்சு வலிக்கிறது என்று குய்யோ முறையோ என்று கத்தினார். உடனே உள்ளுர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர் ப்ரசர் பார்த்தார். ஒரு ஈ.சி.ஜி எடுத்தார்.
ஈ.சி.ஜி -யில் ஒரு பிரச்சினையுமில்லை வாயுக்கோளாறா இருந்தாலும் இருக்கும். ஒரு இஞ்செக்ஷன் போடுறேன். வீட்டிலே போயி ரெஸ்ட் எடுங்க எல்லாம் சரியாகிடும்.’ என்று ஒரு ஊசி போட்டார்.
சங்கரலிங்கம் பலஹீனமான குரலை வரவழைத்து டாக்டர் எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஆஸ்பத்திரியிலேயே ரெஸ்ட் எடுக்கிறேனே.
“ஞஓ உங்க இஷ்டம் நர்ஸ் இவங்களுக்கு அந்த ரெண்டாம் நம்பர் குடுங்க’ என்றார்.
அறையில் வந்து படுத்தவர் மூத்தவன் பாலுவை அழைத்து பாலு நீ பெண் வீட்டுக்கு போன் போட்டு அப்பாவுக்கு உடம்பு சரியில்லன்னு சொல்லி நிச்சயதாம்பூலத்தை ஒரு மாசம் கழிச்சி வெச்சிக்கலாம்னு சொல்லு’ என்றார்.
அப்பா என்னப்பா சொல்றீங்க. இப்ப போயி எப்படி நிருத்தறது?
‘இப்ப நிறுத்தலன்னா என் ஹார்ட் நின்றுடும் சொன்னதை செய்’
பேச்சியம்மாள் குலசை முத்தாரம்மனுக்கும், திருச்செந்தூர் முருகனுக்கும் நேர ஆரம்பித்தார்.
சங்கரலிங்கம் நிம்மதியாக உறங்கினார். விடியற்காலை அறைக்கு வெளியே பேச்சுக்குரல் கேட்டு கண் விழித்தார்.
‘கல்யாணம் கிடக்கு கழுத கல்யாணம் சம்மந்தி உடம்புதான் முக்கியம். அவுங்க நல்லா இருந்தாதானே எல்லாரும் சந்தோசமா இருக்க முடியும்’ என்றபடி உள்ளே வந்தார்.
என்ன இவரு இங்கேயே வந்துட்டாரு என்று எண்ணியபடி வாங்க என்றபடி எழப்போனார். பெண்ணின் தந்தை பதறியபடி வேண்டாம் வேண்டாம் அப்படியே படுத்துக்கங்க! என்றார். சங்கரலிங்கம் அது வந்து’ எதோ சொல்ல வாயெடுத்தார்.
‘நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம் பேசாம ரெஸ்ட் எடுங்க’ என்றபடி மூத்தவன் பாலுவை அழைத்தார்.
‘பாலுத்தம்பி நெஞ்சுவலியை சாதாரணமா நெனைக்கக் கூடாது. இந்த சின்ன ஆஸ்பத்திரியை நம்பி அப்பாவ வைக்கக்கூடாது. இங்க உள்ள மெஷின எல்லாம் நம்ப முடியாது. உடனே நாகர்கோவில் பெரிய தனியார் ஆஸ்பத்திரிக்கு கிளம்புங்க’
திருடனுக்கு தேற்கொட்டியது போலிருந்தது சங்கரலிங்கத்துக்கு தனக்கு ஒன்றுமில்லை என்று சொன்னால் வேசம் கலைந்து விடும் நடப்பது போல் நடக்கட்டும் என்று பேசாமலிருந்தார்.
என்ன தம்பி பேசாம இருக்கீங்க கிளம்புங்க நம்ம கார் இருக்கு அதிலேயே கிளம்பிடுவோம். நானும் கூடவர்றேன். அந்த ஆஸ்பத்திரியை எனக்கு தெரிஞ்ச டாக்டர் ஒருத்தர் இருக்காரு நல்ல கவனிச்சுக்குவாரு’ என்று அவசரப்படுத்தினார்.
ஒண்ணுமில்லன்னு சொல்லி உள்ளே போனாலே உயிரோடு உரிச்சு எடுக்கற ஆஸ்பத்திரியில போயி நெஞ்சுவலின்னு சொன்னால் சும்மா விடுவார்களா? போனவுடனே ஐ.சி.யுவில் படுக்க வைத்து விட்டார்கள். ஈ.சி.ஜீ இ.இ.ஜி ஆஞ்சியோக்ராம் என என்னவெல்லாம்மா எடுத்தார்கள்.
பெண்ணின் தந்தை மாலைவரை கூடவே இருந்தார். மூத்தவன் பாலுவிடம் ‘தம்பி கார இங்கேயே விட்டுவிட்டு போறான். டிலைவரும் இருக்காரு எங்கே போனாலும் எடுத்துட்டு போங்க அப்பாவ விட்டுக்கு கூட்டிட்டு வந்ததும் கார அனுப்பினா போதும்!
‘அதெல்லாம் எதுக்குங்க நீங்க கொண்டு போங்க’ அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. இதிலே நான் என்ன குறைஞ்சிட போறேன். அப்பாவ நல்ல பாத்துக்காங்க நான் வர்றேன்’ கிளம்பினார்.
ஒருவாரம் கழித்து சிறையிலிருந்து விடுவிப்பதை போல சங்கரலிங்கத்தை அனுப்பினார்கள் நொந்துபோய் வீடு வந்து சேர்ந்தார்.
மூத்தவன் பாலு ஒரு பேப்பரை நீட்டினான் ஆஸ்பத்திரி செலவு, மருந்து செலவு, டெஸ்டிங் செலவு என்று பட்டியல் நீண்டது.
‘என்னலே கடைசியில போக்குவரத்து சொலவுன்னு பத்தாயிரம் போட்டிருக்கே?
‘ம் அவர் பாட்டுக்கு கார விட்டுட்டு போயிட்டாரு! உங்கள பாக்க வந்த சொந்த பந்தமெல்லாம் கார எடுத்துக்கிட்டு கன்னியாகுமரி ?? பரப்பு ஆருவின்னு சுத்தி வர்றாங்க 150 லிட்டர் டீசல் போட்டிருக்கு டிரைவர் சாப்பாடு செலவு பேட்டான்னு பத்தாயிரம் ஆயிட்டுது.
‘சரிதான் போ’ என்ற படி மொத்தச் செலவை பார்த்தார் ஒரு இலட்சத்து ரெண்டாயிரத்து ஐநூறு
நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்தார்.    

0 comments:

Post a Comment

தட்டிக்கொடுத்தாலும் திட்டிவிட்டு போனாலும் சந்தோசமே,,,,,

 

Copyright @ 2013 சாத்தான்குளம் வாசகசாலை.